Tuesday, January 26, 2010

பிரித்தானிய கருத்துக்கணிப்பு வாக்களிப்பு நிலையங்களின் விபரம்

பிரித்தானியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கான வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள் வெளிவந்துள்ளன.

சுதந்திர தமிழீழ தனியரசுக்கான ஆணையை 34 ஆண்டுகளின் முன் வட்டுக்கோட்டை பிரகடனத்தின் மூலம் தெரியப்படுத்தியிருக்கும் நிலையில் அதையே இன்றும் ஒட்டுமொத்த தமிழர்களும் விரும்புகின்றனர் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்து அந்த ஆணையை சர்வதேசத்தின் முன் வைத்து சுதந்திர தமிழீழ தனியரசை உருவாக்கும் நோக்கோடு உலகெங்கும் இக்கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் வரிசையில் எதிர் வரும் 30-01-2010 (சனிக்கிழமை) மற்றும் 31-01-2010 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தமது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என பல அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் வாதிகள், போன்றோர் கோரியிருப்பது மட்டுமன்றி அரசியல் ஆய்வாளர்கள் கூட இவ்வகையான தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர்களும் சுதந்திர தமிழீழ தனியரசை ஆதரித்து வாக்களித்தால் அது தமிழீழம் உருவாகுவதை விரைவுபடுத்தி தமிழீழம் மலரும் என கருத்துகள் தெருவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் நடைபெறும் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கான வாக்களிப்பு நிலையங்கள் மக்களின் வசதி கருதி வெளியிடப்பட்டுள்ளது.

கீழே அழுத்தி விபரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்


"இலண்டன் வாக்குச்சாவடிகளின் விபரங்கள்"









"இலண்டன் புறநகர் வாக்குச்சாவடிகளின் விபரங்கள்"


"பிரித்தானிய தேர்தல் விதிமுறைகள்"


Thursday, January 21, 2010

23,24,30 திகதிகளில் சுவிஸ், நெதர்லாந்து,ஜேர்மனி, பிரித்தானியாவில் வட்டுக்கோட்டைத் தேர்தல் - காணொளிகள்



சுவிஸ் வட்டுக்கோட்டை தேர்தல்





கெளத்தூர்மணி வேண்டுகோள்



நெதர்லாந்து வட்டுக்கோட்டை தேர்தல்



ஜேர்மனி வட்டுக்கோட்டை தேர்தல்




பிரித்தானியா வட்டுக்கோட்டை தேர்தல்



Tuesday, January 19, 2010

யேர்மனியில் எதிர்வரும் 24ம் நாள் தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு இணைத்தவர் : தேர்தல் குழு

அன்பார்ந்த யேர்மன்வாழ் தமிழீழ மக்களே!

தமிழீழ தாயகத்தைக் களமாகவும், தளமாகவும் கொண்டு கடந்த ஆறு தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிமுறை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான பெரும் கடப்பாட்டை இன்று நாம் அனைவரும் சுமந்துநிற்கின்றோம். பிரபஞ்ச உரிமை என்று நவநாகரீக உலகம் போற்றிப்பூசிக்கும் மனித உரிமைகள் முற்றாக மறுதலிக்கப்பட்டு, தமது வரலாற்றுத் தாயகத்தில் ஏதிலிகளாகவும், திறந்தவெளிச் சிறைக்கைதிகளாகவும் வாழும் நிர்ப்பந்தத்திற்குள் தமிழீழ தாயக உறவுகள் தள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு எடுத்துரைப்பதற்கும், இடித்துரைப்பதற்குமான சக்தியாக இன்று புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம் எழுந்துநிற்கின்றோம்.

பொதுவான மொழி, வரலாற்றுத் தாயகம், வரலாறு, எதிரி போன்ற அடிப்படைக் பண்பியல்புகளைக் கொண்ட ஒரு இனத்தை தேசிய இனமாக பன்னாட்டு அரசறிவியல் விழுமியங்கள் வரையறைசெய்வதோடு, தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயித்து, இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தனியரசை நிறுவுவதற்கான தன்னாட்சியுரிமையை அவ்வாறான தேசிய இனங்களின் உரித்துடமையாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கின்றது. இந்த வகையில், தமிழ் மொழியைத் தமது பொதுவான மொழியாகவும், ஈழத்தீவின் வடக்கு – கிழக்கைப் புவியியல் மையமாகக் கொண்டுள்ள தமிழீழத்தை தமது வரலாற்றுத் தாயகமாகவும், வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கு முன்னரான தொன்மைமிக்க வரலாற்றையும், பொதுவான எதிரியையும் எதிர்கொள்ளும் தேசிய இனம் என்ற தகுதியை தமிழீழ தேசம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவே தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயித்து, இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழ தனியரசை ஈழத்தமிழினம் நிறுவுவதற்கான பன்னாட்டு அங்கீகாரம்பொருந்திய உரிமமாகத் திகழ்கின்றது.

ஈழத்தீவை விட்டு ஆங்கில ஏகாதிபத்தியம் அகன்றபின்னர் ஏறத்தாள மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட அகிம்சைவழி தழுவிய காந்தியப் போராட்டம் சிங்கள இனமேலாதிக்க அடக்குமுறையால் நசுக்கப்பட்ட நிலையில் எழுச்சிபெற்ற ஆயுதவழி தழுவிய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு சனநாயக ஆணைவழங்கிய மாபெரும் வரலாற்றுப் பிரகடனமாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் விளங்குகின்றது. இதன் மீதான சனநாயக பொதுக்கருத்து வாக்கெடுப்பை புகலிட தேசங்களில் நிகழ்த்தி, எமது அரசியல் வேணவாவை மீண்டுமொரு தடவை உலக சமூகத்திற்கு எடுத்தும், இடித்தும் உரைத்து, தமிழீழ தேசத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது எமது இன்றைய முதன்மை வரலாற்றுப் பணியாகத் திகழ்கின்றது.

இந்த வரலாற்றுக் கடப்பாட்டிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அண்மைய மாதங்களாக நிகழ்ந்தேறி வரும் மீள்வாக்கெடுப்புக்களின் தொடர்ச்சியாக, யேர்மன் தேசத்திலும் இம்மாதம் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று (24.01.2010) இவ்வாறான பொதுக்கருத்து வாக்கெடுப்பை நிகழ்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென பூர்வீக யேர்மனிய கண்காணிப்பாளர்களையும், பதிவாளர்களையும் உள்ளடக்கிய சுயாதீன தேர்தல் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதோடு, தமிழ் மக்கள் செறிந்துவாழும் நகரங்கள் தோறும் வாக்குப் பதிவுநிலையங்களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இதில் பங்கேற்று, தங்களது வாக்குகளைச் செலுத்தி, சுதந்திரமும், இறையாண்மையும் பொருந்திய தமிழீழ தனியரசை நிறுவி மாவீரர்களினதும், மானச்சாவெய்திய மக்களினதும் கனவை நனவாக்குவதற்கான ‘மக்கள் ஆணையை’ உறுதிசெய்யுமாறு அனைத்து யேர்மன்வாழ் தமிழீழ உறவுகளுக்கும் அன்புடன் அறைகூவல் விடுக்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

தேர்தல் குழு – யேர்மனி

தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 017628452181

மின்னஞ்சல்: mandate2009@gmail.com

இணைய முகவரி: www.tamilmandate.de

Wednesday, January 06, 2010

நெதர்லாந்தில் எதிர்வரும் 24ஆம் நாள் தமிழீழத் தனியரசிற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு

ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகலஉரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு சிறந்த ஒரேதீர்வான, தமிழீழத் தனியரசிற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நெதர்லாந்தில் எதிர்வரும் 24ஆம் நாள் (24-01-2010) ஞாயிற்றுக்கிழமை பலநகரங்களில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக நெதர்லாந்து தேர்தல் குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
அன்பார்ந்த நெதர்லாந்துவாழ் தமிழீழமக்களே! 

ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகலஉரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு சிறந்த ஒரேதீர்வானது, இலங்கைத் தீவில் எமது பாரம்பரிய தாயக நிலப்பரப்பில் தன்னாட்சியும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசை அமைப்பதுதான் என்ற வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஏற்று, 1977இல் இலங்கைத் தீவில் நடந்த தேர்தலில் எமது மக்கள் அமோக ஆதரவளித்து வாக்களித்து அங்கீகரித்திருந்தார்கள்.

ஆனால், மீண்டும் ஒரு தேர்தல் மூலம் தமிழீழத் தனியரசுதான் தமிழ் மக்களிற்கான சிறந்த அரசியல் தீர்வென மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய வரலாற்றுக் காலத் தேவை இன்று எம்முன் எழுந்துள்ளது.

இன்று, எமது தாயகத்தில் இத்தேர்தலை நடாத்துவதற்குரிய நல்ல சூழலும் இல்லை. இதை நடாத்துவதற்கு எந்த சக்திகளும் தயாராகவும் இல்லை.

எனவே, நெருக்கடியான இன்றைய காலகட்டத்தில், தாயகத்தில் சிங்கள இனவாதஅரசின் பாரிய தமிழினப் படுகொலைகளிற்கு முகம்கொடுத்து, முட்கம்பி வேலிகளிற்குள்ளும் வெளியிலும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு ஏதிலிகளாகவும் திறந்தவெளிச் சிறைக்கைதிகளாகவும் அவலவாழ்வை வாழும் நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள எமது மக்களினது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க வேண்டிய பாரிய பொறுப்பிலிருந்து புலம்பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் விலகிச் சென்றுவிட முடியாது.

இன்று, ஆயுதப் போராட்டம் ஓய்வுநிலைக்கு வந்தாலும் தமிழர்களின் நியாயபூர்வமான போராட்ட வரலாற்றுச் சக்கரத்தை சனநாயக வழியில் முன்னோக்கி நகர்த்தவேண்டிய பாரிய பொறுப்பு புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இதனடிப்படையிலேயே, நோர்வே, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் அண்மையில் நடைபெற்ற இவ்வாக்கெடுப்புகளில், 99 வீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழீழத் தனியரசுதான் சரியான ஒரே தீர்வென வாக்களித்து, எமது இனத்தின் விடிவிற்கான வரலாற்றுக் கடமையை சரிவரச் செய்துள்ளார்கள். 

இதன் தொடர்ச்சியாக, நெதர்லாந்திலும் எதிர்வரும் 24ஆம் நாள் (24-01-2010) ஞாயிறன்று, பலநகரங்களில், தமிழீழத் தனியரசிற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்று, தங்களது வாக்குகளைச் செலுத்தி, சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுதான் நமது தீர்ப்பு என மக்கள் ஆணையை வழங்க, அனைத்து நெதர்லாந்து வாழ் தமிழீழ உறவுகளிற்கும் அன்புடன் அறைகூவல் விடுக்கின்றோம்.

“தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்”

தேர்தல் குழு - நெதர்லாந்து
தொடர்புகட்கு: 06 84522939

மின்னஞ்சல்: tamilverkiezing@gmail.com
இணையத்தளம்: www.tamilverkiezing.nl

Monday, January 04, 2010

சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு


தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! அளப்பரிய இழப்புக்கள் சொல்லொணா துன்பங்கள் மதிப்பிட முடியா அழிவுகளை எல்லாம் தாங்கி இன்று தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஒரு திருப்பு முனையை வந்தடைந்துள்ளது.

இந்த அர்ப்பணிப்புக்கள் அனைத்தையும் எமது எதிர்கால சுபீட்சமான வாழ்விற்கான உரமாக்க வேண்டிய காலப்பணி இன்று எம்முன் எழுந்து நிற்கின்றது! அன்றும் இன்றும் என்றும் தமிழரின் தாகம் தனித்தமிழீழமே என்பதை இந்த உலகிற்கும் தமிழர்களை ஏமாற்றி ஏப்பம் விட நினைக்கும் அனைத்து ஆதிக்க சக்திகளிற்கும் துல்லியமாக பறைசாற்ற வேண்டிய நேரமிது!

இந்த காலப்பணியை செய்திட சுவிஸ் நாட்டின் பல பொது அமைப்புக்களும் நேற்று முன்தினம் (02.01.2010) ஒன்றுகூடி தமிழீழம் என்பது மக்கள் ஆணை என்பதை அறிவிக்கும் பொருட்டு சுவிஸ் நாட்டில் ஒரு பொது கருத்துக்கணிப்பை நிகழ்த்தும்படி ஒரு தேர்தல் குழுவை உருவாக்கியுள்ளனர்!

இந்த ஒன்றுகூடலில் இளைய தலைமுறையினர் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இவ்வண்ணம் முன்னெடுத்துச் செல்வதற்கு தமது கல்விசுமையையும் தாண்டி களமிறங்கியிருப்பது வருகை தந்திருந்த 40ற்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்களை கவர்ந்திருந்தது. சுவிஸ் நாட்டில் தமிழீழ ஆணைக்கான வாக்கெடுப்பு இத்தைத்திருமாதத்தில் 23ஆம் 24ஆம் திகதிகளில் சகல மாநிலங்களிலும் முன்னெடுக்கப்பட இருப்பதை தேர்தல்குழு இத்தால் அறிவிக்கின்றது.

இப்பணிக்கு எமது மக்கள் சகல பேதங்களையும் மறந்து தமிழீழ தாயை மட்டும் நெஞ்சில் நிறுத்தி இப்பணிக்கு தமது பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டும் என வேண்டுகின்றோம். இனி வரும் எமது அனைத்து அரசியல் வேலைகளிற்குமான அடித்தளம் இவ்வாக்கெடுப்பு என்பதை நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 1977 ம் ஆண்டில் நடைபெற்ற சுதந்திர தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பிற்கு பின்னர் சுதந்திரமாக நாம் வாக்களிக்க இருக்கும் தேர்தல் களம் இது என்பதை உணருங்கள்!

ஐனநாயக வழியில் மக்களால் மக்களிற்காக நடத்தப்படுகின்ற இவ்வாக்கெடுப்பில் எமது பங்களிப்பு தான் எமது அரசியல் எதிர்காலத்திற்கான காத்திரத்தை நிர்ணயிற்க போகின்றது.

வாருங்கள் மக்களே இதுவும் ஒரு போராட்ட களம் தான்!

உங்கள் வாக்குகளே தமிழர்களின் சுபீட்சமான வாழ்வை நிர்ணயிக்கப்போகின்ற முக்கிய காரணி. எமது தாயக உறவுகளினதும் புலம்பெயர்ந்துள்ள எங்களினதும் எதிர்காலம் சகல விதத்திலும் வளம்பெற எமது முதலாவது அரசியல் பணியை செய்வோம்!!

எமது தேர்தல் நடவடிக்கைகள் சார்ந்த சகல தகவல்களையும் எமது இணையத்தளத்தில்

நீங்கள் நேரடியாக (http://www.tamilelection.ch/) பெற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

மக்கள் சக்தியே மாபெரும் சக்தி!

பலம் தாருங்கள் அமைப்போம் எமது தேசம்!!

சுவிஸ் தேர்தல் குழு

துவாரகன்: 078 905 4718

குருபரன்: 079 308 0669

சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு

Blog Archive