Tuesday, October 27, 2009

நவம்பர் மாதம் 15ஆம் நாள் நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல்


தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்து உழைக்கவும் நோர்வே வாழ் தமிழீழ மக்களின் நலன்களுக்காக செயற்படவும் "நோர்வே ஈழத் தமிழர் அவை" எனும் புதிய ஜனநாயக அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் நாள் நடாத்தப்படவுள்ளது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயக அமைப்பாக நோர்வே ஈழத்தமிழர் அவையானது அமையவிருப்பதாக இவ் அமைப்பினை உருவாக்குவதற்கான செயற்குழு தெரிவித்துள்ளது.

அந்த செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்னி வதை முகாம்களில், நாளும் இன்னலுறும் எம்முறவுகளின் இன்னல்களைப் போக்கிடச் சர்வதேச சமூகத்திடம் உரிமையுடன் குரல் கொடுக்கவும்,

நோர்வேவாழ் தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்தம் வளர்ச்சிக்காய் வழிவகுக்கவும்,

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் தாயக உறவுகளின் நிரந்தரத் தீர்வுக்காய் பணியாற்றிடவும்,

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் வகையில் நோர்வேயில் நடைபெற்ற வாக்கெடுப்பிற்குத் தமிழர்களின் பேராதரவு கிடைத்ததன் அடிப்படையில் இம்முயற்சியானது முன்னெடுக்கப்படுகின்றது.

அரசியல், சமூகம், பொருண்மியம், பண்பாடு, மொழி, கல்வி எனப்பல்வேறு தளங்களிலும் தக்க பணியாற்றிடத் தக்கதோர் அவைதனைத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யும் முதன்முயற்சி, முதன்முயற்சியாய் அமைய அனைவரும் இணைவோம்.

நோர்வே வாழ் ஈழத்தமிழர்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட நோர்வே ஈழத்தமிழ் மக்களவை, வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின்படி சுதந்திரமும் இறைமையும் மிக்க தமிழீழ அரசினை அமைப்பதற்காக நோர்வே நாடளாவிய ரீதியில் தொடர்ந்தியங்கும்.

நோர்வேத் தமிழ் அமைப்புக்களால் தெரிவு செய்யப்படும் நோர்வே ஈழத்தமிழ் அமைப்புக்கள் தெரிவவை என இருபிரதிநிதிகள் குழுக்களைக் கொண்டதாக நோர்வே ஈழத்தமிழர் அவை அமையும்.

போட்டியிடும் தகுதி பெற்றோர்:

நோர்வே ஈழத்தமிழர் அவையின் யாப்பினை ஏற்றுக்கொள்ளும், நோர்வேயில் நிரந்திர வதிவிட அனுமதியுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இத்தேர்தலில் போட்டியிடலாம்.

வாக்களிக்கும் தகுதி பெற்றோர்:

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 16 வயதுக்கு மேற்பட்ட நோர்வே வாழ் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் அல்லது மேற்குறிப்பிடப்பட்டவர்களை சட்டரீதியான வாழ்க்கைத் துணைவர்களாகக் கொண்டவர்கள் வாக்களிக்கும் தகுதி பெறுவார்கள்.

தேர்தல் திகதியும், வேட்புமனுத் தாக்கலும் எதிர்வரும் கார்த்திகை 15இல் (15.11.2009) நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான தேர்தலை நடத்துவதென, இவ்வமைப்பின் தேர்தற்பணிகளை முன்னெடுத்துவரும் சுயாதீனத் தேர்தற்குழுவானது தீர்மானித்துள்ளது.

இவ்வமைப்பின் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் 18.10.2009ஆம் திகதி தொடக்கம் 30.10.2009ஆம் திகதிவரை பெற்றுக் கொள்ளப்பட்டு, வேட்பாளர் பட்டியல் 01.11.2009ஆம் திகதி வெளியாகும்.

இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களைப் பிரேரிக்க விரும்புவோர் www.ncet.no எனும் இணையத்தளத்தில் உள்ள வேட்பாளர் படிவத்தைப் பூர்த்தி செய்து, பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

Norwegian Council of Eelam Tamils

Post boks 15,

Furuset,

1001 Oslo

குறிப்பு:

தமிழ், ஆங்கில மொழிகளிலும் வரையப்பட்டுள்ள நோர்வே ஈழத்தமிழர் அவையின் மாதிரி யாப்பானது, www.ncet.no எனும் நோர்வே ஈழத்தமிழர் அவையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாப்பின் இறுதிவடிவம் தமிழ், ஆங்கிலம், நொஸ்க் ஆகிய மும்மொழிகளிலும் 17.10.2009ஆம் திகதி வெளியாகும்.

தொடர்புகளுக்கு:

தொலைபேசி: +4746350158

மின்னஞ்சல்: post@ncet.no

Blog Archive