Thursday, February 25, 2010

இத்தாலியில் வட்டுக்கோட்டைத்தீர்மானத்திற்கான மீள் வாக்கெடுப்பு.

அன்பான டென்மார்க், இத்தாலி வாழ் தமிழீழ மக்களே!

வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் மீள்உறுதிப்படுத்தும் கருத்துக்கணிப்பு தேர்தல் எதிர்வரும் 28ம் திகதியில் டென்மார்க்கிலும், அதனைத்தொடர்ந்து இத்தாலி நாட்டில் நடைபெறவிருக்கும் மாபெரும் இலட்சிய தமிழரின் பெருவிருப்பம், வெற்றியளிக்க பிரான்சு வாழ் தமிழ்மக்கள் தமது இதயபூர்வமான வாழ்த்துதல்களை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றது.

உலகத்தின் எந்தவொரு மூலைக்கு சென்றாலும் தமிழீழ மக்களாகிய எமது பெருவிருப்பம் தமிழீழத் தாயகமே என்பதை மீண்டும் ஒருமுறை சனநாயக வழித்தேர்தல் மூலம் சர்வதேசத்திற்கு சொல்கின்றோம். அந்த உண்மைச்செயற்பாட்டினை முதன்முதலில் பிரான்சு நாட்டில் முன்னெடுத்து அதற்கடுத்ததாக நோர்வே நாட்டிலும் மீண்டும் பிரான்சு நாட்டிலும், அதனைத் தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில் எல்லாம் ஓருமித்த குரலில் தமது வாக்களிப்பு மூலம் உலகத்திற்கு சொல்லப்பட்டுவிட்டது. இந்த வகையில் எதிர்வரும் 28ம் திகதி டென்மார்க்கிலும், அதனைத் தொடர்ந்து இத்தாலியிலும் நடைபெறவுள்ளதும் அதற்கான ஆதரவுகளை அங்குள்ள அரசும், அரசசார்பற்ற அமைப்புக்களும் வழங்குவது இன்னும் எமது இலட்சியத்தாகத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமைகின்றது.

கடந்த காலங்களில் தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் டென்மார்க் அரசும், அங்கு வாழும் தமிழ்மக்களும் காத்திரமான பங்கை வகித்திருக்கின்றனர். அதேபோலவே இத்தாலி நாட்டிலும் அங்கு வாழும் சிங்களப் பெருன்பான்மையானவர்களுக்கு ( சிறீலங்காவுக்கு அடுத்தபடியாக சிங்களவர்கள் அதிகம்வாழும் நாடு) மத்தியில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சுனாமி அநர்த்த நேரத்தில் உடனடியான உதவியை தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளிடம் கொண்டு சென்று வழங்கியதும், அவர்களை விருந்தினர்களாக தமது நாட்டு அழைத்து தமிழ்மக்களுக்கு உதவும் பல செயற்திட்டங்களை மேற்கொண்ட பெருமையும் இத்தாலிய நாட்டிற்கு சாரும்.

இந்த வகையில் டென்மார்க், இத்தாலி நாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் நடைபெறவிருக்கும் கருத்துக்கணிப்புத்தேர்தலில் ஏனைய நாடுகளில் எமது மக்கள் வழங்கிய ஆணையோடு தமது தாயகம் கொண்ட மனஎண்ணப்பாட்டினை தமது வாக்களிப்பின் மூலம் வழங்கி பெருமைசேர்ப்பார்கள். தாயகத்தில் இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளின் குழப்பமான இன்றைய சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் உறுதியான சனநாயக வழி தெரிவிப்பிற்கு சர்வதேசம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். எனவே இந்த காத்திரமான நிலையை தமிழீழ மக்கள் நாம் உணர்ந்து ஒற்றுமையாக ஓரணியில் நின்று உரத்து குரலில் தமிழரின் தாகம் தமிழீழ தாயகமே என்று கூறுவோம், கரங்கொடுப்போம். வாக்களிப்போம், வெற்றிகொள்வோம்

பிரான்சு வாழ் தமிழீழ மக்களின் சார்பில்
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு

சுதந்திர தமிழீழத்துக்கான டென்மார்க் தழுவிய வாக்கெடுப்பு

Blog Archive