வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தின்; முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது
மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகால விடுமுறை கழிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுவதால், அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரும் நேரத்தில் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இதனை தமது தார்மீகக் கடமையாக ஏற்று, தமது ஒற்றுமையையும், விருப்பையும் பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்கும், அனைத்துலக சமுகத்திற்கும் அனைத்துலக ஊடகங்களுக்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.