Saturday, October 23, 2010

மாவீரர்களின் அடையாளங்களை சிறீலங்கா அழித்துவரும் நிலையில் பிரான்சில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைப்பதற்கு ஏற்பாடு


உலக போரியில் விதிமுறைகளுக்கு முரணாக, மாவீரர்களின் கல்லறைகளையும், நினைவுதூபிகளையும் இருந்த இடம்தெரியாது சிறீலங்கா அரசின் இராணுவம் சிதைத்தழித்துவரும் நிலையில், பிரான்சின் லாகூர்நெப் நகரில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு அம்மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.

சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தன்று இச்சிலை திறந்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக லா கூர்நெவ் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

2007ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் லா கூர்நெவ் நகரசபை, தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து மிகப் பிரமாண்டமாக தமிழ்க் கிராமம் என்ற நிகழ்வு ஒன்றை நடாத்தியது. அதில் பிரான்சில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கொண்டன.

அந்நிகழ்வுக்கு லா கூர்நெவ் நகரசபை எமது சமாதான தூதுவராக இருந்த சுப.தமிழ்ச்செல்வன் அவர்களை பிரதம விருந்தினராக அழைத்திருந்தனர். அவ்வேளையில் எம் தாயகத்தில் பிரச்சினை காரணமாக அவரால் வர முடியாது என்றும், அன்றைய நாளில் தொலைபேசியூடாக வாழ்த்துக் கூறுவதாகவும் சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறியிருந்தார்.

ஆனால் துரதிஸ்டமாக அன்றைய நாளே அவர் வீர மரணத்தைத் தழுவிக் கொண்டார். இந்நிலையில், லா கூர்நெவ் நகரசபை நகரபிதா அன்றைய நாளில் அவரின் மறைவிற்கு வீரவணக்கத்தை செலுத்திக் கொண்டு நிகழ்வுகளை நடாத்தினார்.

தற்போது சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாள் அன்று அவருக்கான நினைவுச் சிலையினை அமைக்க லா கூர்நெவ் நகரசபை ஏற்கனவே அவரது நினைவாக நடப்பட்டுள்ள மரத்திற்கு அருகில் இடம் ஒதுக்கித் தந்துள்ளது.

லா கூர்நெவ் தமிழ்ச்சங்கமும் Le sens de l'art (la galerie) இணைந்து சுப.தமிழ்ச்செல்வனின் சிலையினை அமைத்து வருகின்றனர். எனவே பேரன்பு கொண்ட மக்களே அனைவரும் வரும் நவம்பர் மாதம் முதலாம் நாள் லா கூர்நெவ் நகர சபை முன்னால் காலை 11 மணிக்கு வருகைதருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

Blog Archive