Tuesday, February 16, 2010

சுதந்திர தமிழீழத்துக்கான டென்மார்க் தழுவிய வாக்கெடுப்பு

பல நூற்றாண்டு காலம் மேற்கத்தேய ஆதிக்க சக்திகளாலும் கடந்த 62 ஆண்டுகளாக சிங்கள அரசாலும் அடிமைப்படுத்தப்பட்டு சொல்லொணா துயரங்களை அனுபவித்துவரும் தமிழீழமக்கள். தமது பூர்வீகமண்ணில் சுதந்திரமாக ஏனைய அனைத்துலக மக்கள் அனுபவிக்கும் உரிமைகளுடன் வாழ்வது அவர்கள் தமது பூர்வீக தாயகத்தில் மீள அமைக்கும் தமிழீழத் தனியரசில் தான் முடியும் என குடிநாயக வழியில் வரலாற்றுத் தீர்ப்பெழுதிய நோர்வே, பிரான்சு, கனடா, சுவிர்சலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய வாழ் தமிழீழமக்களைத் தொடர்ந்து. டென்மார்க் வாழ் தமிழீழமக்களும் வரும் 28ம் நாள் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை நடாத்தவுள்ளனர்.

முள்ளிவாய்காலுடன் முடிந்துவிட்டது தமிழர்களின் தமிழீழக் கோரிக்கை என்றும் தமிழீழக்கோரிக்கை என்பது தனி ஒரு மனிதனின் கோரிக்கையெனவும் கொக்கரிக்கும் சிறீலங்கா அரசிற்கும் தமது சுய பிராந்திய நலனை மட்டும் கருத்தில் கொண்டுள்ள சில வல்லரசுகளுக்கும், தமிழ் மக்களின் குடிநாயக பிரதிநிதிகளென்ற புகழாரத்துடன் அம்மக்கள் வழங்கிய சுதந்திர தமிழீழத்திற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானமெனும் மக்களாணையை ஏற்றுக்கொள்ளாத சில அடிமை அரசியல்வாதிகளிற்கும் தமிழ்பேசும் ஈழத்துமக்களுக்கான ஓரே ஒரு பாதுகாப்பான தீர்வு சுதந்திர தமிழீழமே என குடிநாயக வழியில் இடித்துக்கூறவேண்டிய வரலாற்று கடமையை நாம் கொண்டுள்ளோம். எப்படி நோர்வே, பிரான்சு, கனடா, சுவிர்சலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளில் இக்கருத்துக்கணிப்பு தமிழீழ மக்களின் ஆணையுடன் வெற்றிபெற்றதோ அதேபோன்று நாம் வாழும் டென்மார்க்; மண்ணிலும் அமோக வெற்றி பெறுமென்பது திண்ணம்.

தமிழீழக்கோரிக்கை என்பது 1977ம் ஆண்டு இலங்கைத்தீவின் அனைத்து தமிழ்பேசும் மக்களின் ஆணைபெற்ற கோரிக்கை என்பதை 2002ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கலந்துகொண்ட பத்திரகையாளர் சந்திப்பில் விரிவாக தமிழில் எடுத்துரைத்ததுடன் தமிழீழதேசத்தின் குரல் பாலாஅண்ணா ஆங்கிலத்திலும் எடுத்துரைத்திருந்தார்.

அத்துடன் தமிழ்பேசும் மக்களாகிய நாம் கடந்த பல தசாப்தங்களாக கோரிவரும் இறையாண்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையானது இவ்வுலகத்தால் மறுக்கமுடியாத கோரிக்கையாகும். ஆயினும் இன்றைய பூகோள அரசியலில் குருட்டுத்தனமான மதவாதிய பயங்கரவாத்திற்கும், நியாயமான சுயநிர்ணயத்துக்கான விடுதலைப்பேராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அனைத்துலகம் நியாயமான சுயநிர்ணயத்துக்கான விடுதலைப்போராட்டங்களை தமது பூகோள நலன்களுக்காக பயங்கரவாதிகளென்று பச்சைகுத்தி அழிக்க முயலுகின்றார்கள் என்பது எமது போராட்டம் எமக்குணர்த்திய யதார்த்தமான உண்மையாகும்.

ஆயினும் கடலில் மிதக்கும் படகு நிலையாக எப்படி நிற்காதோ அதேபோன்று உலக அரசியலும் ஓரே பாதையில் செல்லாது. தமிழ் மக்கள் கொள்கையிலும் இலட்சியத்திலும் ஒன்றுபட்டு தமது தமிழீழத்திற்கான விருப்பை மீண்டும் அனைத்துலகம் தான் விளங்கிக்கொள்ளக் கூடிய பாதையென பறைசாற்றிக் கொண்டுள்ள குடிநாயகப் பாதையில் இடித்துக்கூற தமிழீழ மக்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

அதன் முதற்படியாகவே இவ் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. ஆகவே அனைத்து டென்மார்க் வாழ் தமிழ் பேசும் மக்களும் தவறாது கலந்துகொண்டு வாக்களிக்கவேண்டியது வரலாற்றுக் கடைமையாகிறது.
டென்மார்க்கின் 32 நகரங்களில் இந்த வாக்கெடுப்பு நடைபெறும்.

மேலதிக விபரமான தகவல்கள் விரைவில் தொடர்ச்சியாக எம்மால் எமது இணையத்தளத்தில் பதிவுசெய்யப்படும்.
தேர்தல் குழு டென்மார்க் தமிழர் பேரவை.
இணையத்தளம் : www.tamilvalg.dk

தேர்தல் குழு, டென்மார்க் தமிழர் பேரவை.
மேலதிக தொடர்புகளுக்கு : 52173671

Blog Archive