Monday, January 19, 2009

இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் மாபெரும் கண்டனப் பேரணி

அமெரிக்க தமிழ் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பான "அமெரிக்கத் தமிழர்களும் நண்பர்களும்" (Tamil Americans and Friends - TAF) எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் பேரணிக்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழீழத்தின் வன்னிப் பகுதி மீது தற்போது சிறிலங்கா படைகள் மேற்கொண்டு வரும் பாரிய படையெடுப்பின் ஊக்க சக்தியாக இந்தியா இருப்பதாகக் கருதப்படும் பின்னணியில் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) முற்பகல் 11:00 மணிக்கு பேரணி நடைபெறவுள்ளது.

மிகவும் முக்கியமான இன்றைய காலத்தின் தேவை கருதி போதிய முன்னறிவுப்பு வழங்க அவகாசம் ஏதும் இல்லாததால் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்தப்படும் இப்பேரணியில் அமெரிக்கத் தமிழர்கள் அனைவரையும் பெருந்திரளாக வந்து பங்கேற்குமாறு பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தற்போது நிகழும் தமிழின படுகொலைப் போரை உடனடியாக நிறுத்தும் படியும் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் அனைத்து விதமான போர் தொடர்பான உதவிகளையும் புலிகள் இயக்கம் தொடர்பான உளவுத் தகவல்களையும் உடனடியாக நிறுத்தும்படியும் இந்தியாவைக் கோருவதுடன்-

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்பதுடன் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவில் இருக்கும் தடையை உடனடியாக நீக்கும் படியும் இப்பேரணியின் போது அமெரிக்கத் தமிழர்கள் இந்தியாவைக் கோருவர் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வின் முடிவில் மேற்கூறப்பட்ட கோரிக்கைகளுடன், தமிழீழம் எப்போதும் இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் என்ற வாதத்தையும் வலியுறுத்தும் மனுவொன்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவரிடமும் அவர் ஊடாக இந்தியப் பிரதமர் மற்றும் சோனியா காந்தி அம்மையாரிடமும் கையளிக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சுவிற்சர்லாந்தில் நாளை மறுநாள் அவசரகால ஒன்றுகூடல்

சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களை காப்பதற்கான அவசரகால ஒன்றுகூடலுக்கு சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த ஒன்றுகூடல் நாளை மறுநாள் புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும்.
இதில்

- தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும்

- போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜ.நா. உட்பட அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும்

என்ற கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாக சுவிஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு எமது மக்களின் அவலங்களை இந்த உலகத்துக்கு எடுத்துரைப்போம்.

வரலாற்றில் இதுவரையில் இல்லாத மாபெரும் மனித அவலங்களை எமது இனம் எம் சொந்த பூமியில் சந்தித்து வருகின்றது. விரைந்து செயற்பட்டு எமது மக்களின் வாழ்வை மீட்டெடுப்பது எமது கடமை.

அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilnaatham.com/advert/2009/jan/20090119/20090119/SWISS/

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளதாவது:

வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் சிறிலங்கா அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை பற்றி அறியத்தான் சென்று உள்ளார்.

மேலும் இலங்கை தமிழருக்கு அதிக சேதம் விளைவிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ஒருபோதும் அவர் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. சிறிலங்கா போர் தளபதி சரத் பொன்சேகா சிறப்பாக செயற்படுகிறார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

முல்லைத்தீவில் முற்றுகையிடப்பட்டுள்ள சில லட்சம் தமிழர்களை கடல் வழியாகவும், வான்வழியாகவும், தரை வழியாகவும் சிறிலங்கா இராணுவம் தாக்கி வருகிறது.

இது தொடர்பாக நம்முடைய செயலாளர் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏன் பேசவில்லை. சிறிலங்கா அரசாங்கத்திடம் அரசிடம் போர் நிறுத்தத்தை தொடர்பா பேச வேண்டாம் என்று சொல்லி தானே அவரே அனுப்பி வைத்திருக்கிறது. அப்படியென்றால் இந்திய அரசாங்கம், இந்திய தமிழ் மக்களின் கோரிக்கையை நிராகரித்து அவமானப்படுத்தி விட்டது என்று தானே அர்த்தம்.

மத்திய அரசின் இந்த கடும் பாதக செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம் குறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்த கருத்துக்கள். இது தொடர்பாக நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதே சமயத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்து நாங்கள் பேச இருக்கிறோம்.

முதலமைச்சர் கருணாநிதி இலங்கை தமிழருக்காக தியாகம் செய்ய காத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் என்ன தியாகம் செய்ய தயாராக இருக்கிறார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

50 ஆண்டுகாலம் முயற்சி செய்துகொண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். அப்படியென்றால் என்ன அர்த்தம். இதுவரை தோற்று வந்ததாக தானே அர்த்தம்.

சரி அதனை விட்டு விடுவோம். இதற்கு முன்பு தி.மு.க. மத்திய அதிகாரத்தில் இல்லை. இப்போது காங்கிரசுக்கு சரி பாதியாக இருக்கிறார்களே? இப்போது ஏன் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.

முக்கியமான முடிவுகள் எடுக்கும் அமைச்சில் தி.மு.க. உள்ளது. அப்படியிருந்தும் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு தமிழனை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை ஏன் இவர்கள் வற்புறுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்களை கொல்லும் எண்ணம் சிங்கள இராணுவத்திற்கு இல்லை என்றும், விடுதலைப் புலிகள் தான் தமிழ்மக்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்றும் ஜெயலலிதா கூறியதாக வரும் தகவல்கள் தொடர்பாக எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் அப்படி கூறியிருந்தால் அது தவறு. ஏனெனில், சிங்கள இராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவிப்பது எல்லோருக்கும் தெரியுமே.

இது தொடர்பாக உண்மை நிலைய அறிய வேண்டுமானால் நடுநிலையாளர்களான 4 தமிழர்களை முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கு அனுப்பி, அங்குள்ள நிலைமைகளை கண்டு வர சொல்லுங்கள்.

விடுதலைப் புலிகள் கேடயமாக தமிழ் மக்களை பயன்படுத்தினார்கள் என்று அவர்கள் கூறினால் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோம். விடுதலைப் புலிகளை எதிர்த்து போராடவும் நாங்கள் தயாராகவும் இருக்கிறோம் என்றார் அவர்.

அமெரிக்கத் தூதரகம் முன்பாக நாளை நோர்வ தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் நாளை செவ்வாய்க்கிழமை (20.01.09) காலை 9:30 நிமிடம் முதல் 10:30 நிமிடம் வரை நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினைத் தடுத்திட, உடனடிப் போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா கொடுத்திட வேண்டும் எனவும் சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்தக் கோரியும் இக்கவனயீர்ப்பு மூலம் வலியுறுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் 44 ஆவது அரச தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராக் ஒபாமா பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்கத் தூதரக முகவரி:
Henrik Ibsens gate 48, 0244 Oslo

[19/01/2009 - திங்கள்] "பிரான்சில் மாபெரும் ஒன்றுகூடல்"

[18/01/2009 - ஞாயிறு] ''சுழற்சி முறையிலான உண்ணாநிலை"




Blog Archive