தமிழீழத்தின் வன்னிப் பகுதி மீது தற்போது சிறிலங்கா படைகள் மேற்கொண்டு வரும் பாரிய படையெடுப்பின் ஊக்க சக்தியாக இந்தியா இருப்பதாகக் கருதப்படும் பின்னணியில் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) முற்பகல் 11:00 மணிக்கு பேரணி நடைபெறவுள்ளது.
மிகவும் முக்கியமான இன்றைய காலத்தின் தேவை கருதி போதிய முன்னறிவுப்பு வழங்க அவகாசம் ஏதும் இல்லாததால் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்தப்படும் இப்பேரணியில் அமெரிக்கத் தமிழர்கள் அனைவரையும் பெருந்திரளாக வந்து பங்கேற்குமாறு பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
தற்போது நிகழும் தமிழின படுகொலைப் போரை உடனடியாக நிறுத்தும் படியும் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் அனைத்து விதமான போர் தொடர்பான உதவிகளையும் புலிகள் இயக்கம் தொடர்பான உளவுத் தகவல்களையும் உடனடியாக நிறுத்தும்படியும் இந்தியாவைக் கோருவதுடன்-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்பதுடன் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவில் இருக்கும் தடையை உடனடியாக நீக்கும் படியும் இப்பேரணியின் போது அமெரிக்கத் தமிழர்கள் இந்தியாவைக் கோருவர் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வின் முடிவில் மேற்கூறப்பட்ட கோரிக்கைகளுடன், தமிழீழம் எப்போதும் இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் என்ற வாதத்தையும் வலியுறுத்தும் மனுவொன்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவரிடமும் அவர் ஊடாக இந்தியப் பிரதமர் மற்றும் சோனியா காந்தி அம்மையாரிடமும் கையளிக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.