Tuesday, January 20, 2009

இந்தியாவை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சிறிலங்காவுக்கு உதவும் இந்தியாவை கண்டித்து தமிழகம் முழுவதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு நடத்தி வருகிற தமிழ் இன அழிப்பு இராணுவ தாக்குதல்களுக்கு இந்திய அரசு பெருமளவில் ஆயுத உதவியும், நிதி உதவியும் செய்து வருகிறது.

6 லட்சம் தமிழர்கள் முல்லைத்தீவில் உணவின்றி, மருந்தின்றி தவிக்கிறார்கள். சிங்கள அரசு ஈவு இரக்கமின்றி அந்த மக்கள் மீது இடைவிடாத வானூர்தி தாக்குதலும், பீரங்கித் தாக்குதலும் நடத்தி வருகிறது.

பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் ஆயுதம் ஏந்நிப் போராடும் ஹமாஸ் அமைப்பினர் மீது இராணுவத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் அனைத்துலக நாடுகளின் கருத்தினை மதித்து போர் நிறுத்தம் செய்து விட்டது.

ஆனால், இலங்கையில் போர் நிறுத்தத்திற்காக நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசாங்கம் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.

கண்துடைப்புக்காகக்கூட பிரணாப் முகர்ஜியை இதுவரை அனுப்பகூட இல்லை. சிவ்ங்கர் மேனன் சிறிலங்கா இராணுவத்தின் தமிழ் இனப் படுகொலைக்கு பாராட்டுத் தெரிவித்து உள்ளார்.

ஈழத் தமிழ் மக்கள் சிங்கள அரசிடம் மடிப்பிச்சை ஏந்தி அடிமைகளாக வாழ்வதை விட மடிவதே மேல் என்று தாங்களாகவே முல்லைத்தீவில் இராணுவத் தாக்குதல்களுக்கு அபசாமல் மரண பூமியில் தவிக்கின்றார்கள்.

இந்திய அரசையும் அதற்குத் துணைபோகும் மாநில அரசையும் கண்டித்தும் எதிர்வரும் புதன்கிழமை (28.01.09) முற்பகல் 11:00 மணியளவில் தமிழ்நாடு எங்கும் மாவட்டத்தலை நகரங்களில் ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.

Blog Archive