இது தொடர்பாக நெதர்லாந்து தேர்தல் குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
அன்பார்ந்த நெதர்லாந்துவாழ் தமிழீழமக்களே! ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகலஉரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு சிறந்த ஒரேதீர்வானது, இலங்கைத் தீவில் எமது பாரம்பரிய தாயக நிலப்பரப்பில் தன்னாட்சியும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசை அமைப்பதுதான் என்ற வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஏற்று, 1977இல் இலங்கைத் தீவில் நடந்த தேர்தலில் எமது மக்கள் அமோக ஆதரவளித்து வாக்களித்து அங்கீகரித்திருந்தார்கள்.
ஆனால், மீண்டும் ஒரு தேர்தல் மூலம் தமிழீழத் தனியரசுதான் தமிழ் மக்களிற்கான சிறந்த அரசியல் தீர்வென மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய வரலாற்றுக் காலத் தேவை இன்று எம்முன் எழுந்துள்ளது.
இன்று, எமது தாயகத்தில் இத்தேர்தலை நடாத்துவதற்குரிய நல்ல சூழலும் இல்லை. இதை நடாத்துவதற்கு எந்த சக்திகளும் தயாராகவும் இல்லை.
எனவே, நெருக்கடியான இன்றைய காலகட்டத்தில், தாயகத்தில் சிங்கள இனவாதஅரசின் பாரிய தமிழினப் படுகொலைகளிற்கு முகம்கொடுத்து, முட்கம்பி வேலிகளிற்குள்ளும் வெளியிலும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு ஏதிலிகளாகவும் திறந்தவெளிச் சிறைக்கைதிகளாகவும் அவலவாழ்வை வாழும் நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள எமது மக்களினது அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க வேண்டிய பாரிய பொறுப்பிலிருந்து புலம்பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் விலகிச் சென்றுவிட முடியாது.
இன்று, ஆயுதப் போராட்டம் ஓய்வுநிலைக்கு வந்தாலும் தமிழர்களின் நியாயபூர்வமான போராட்ட வரலாற்றுச் சக்கரத்தை சனநாயக வழியில் முன்னோக்கி நகர்த்தவேண்டிய பாரிய பொறுப்பு புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இதனடிப்படையிலேயே, நோர்வே, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் அண்மையில் நடைபெற்ற இவ்வாக்கெடுப்புகளில், 99 வீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழீழத் தனியரசுதான் சரியான ஒரே தீர்வென வாக்களித்து, எமது இனத்தின் விடிவிற்கான வரலாற்றுக் கடமையை சரிவரச் செய்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக, நெதர்லாந்திலும் எதிர்வரும் 24ஆம் நாள் (24-01-2010) ஞாயிறன்று, பலநகரங்களில், தமிழீழத் தனியரசிற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்று, தங்களது வாக்குகளைச் செலுத்தி, சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுதான் நமது தீர்ப்பு என மக்கள் ஆணையை வழங்க, அனைத்து நெதர்லாந்து வாழ் தமிழீழ உறவுகளிற்கும் அன்புடன் அறைகூவல் விடுக்கின்றோம்.
“தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்”
தேர்தல் குழு - நெதர்லாந்துதொடர்புகட்கு: 06 84522939
மின்னஞ்சல்: tamilverkiezing@gmail.com
இணையத்தளம்: www.tamilverkiezing.nl