Tuesday, January 19, 2010

யேர்மனியில் எதிர்வரும் 24ம் நாள் தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு இணைத்தவர் : தேர்தல் குழு

அன்பார்ந்த யேர்மன்வாழ் தமிழீழ மக்களே!

தமிழீழ தாயகத்தைக் களமாகவும், தளமாகவும் கொண்டு கடந்த ஆறு தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிமுறை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான பெரும் கடப்பாட்டை இன்று நாம் அனைவரும் சுமந்துநிற்கின்றோம். பிரபஞ்ச உரிமை என்று நவநாகரீக உலகம் போற்றிப்பூசிக்கும் மனித உரிமைகள் முற்றாக மறுதலிக்கப்பட்டு, தமது வரலாற்றுத் தாயகத்தில் ஏதிலிகளாகவும், திறந்தவெளிச் சிறைக்கைதிகளாகவும் வாழும் நிர்ப்பந்தத்திற்குள் தமிழீழ தாயக உறவுகள் தள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு எடுத்துரைப்பதற்கும், இடித்துரைப்பதற்குமான சக்தியாக இன்று புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம் எழுந்துநிற்கின்றோம்.

பொதுவான மொழி, வரலாற்றுத் தாயகம், வரலாறு, எதிரி போன்ற அடிப்படைக் பண்பியல்புகளைக் கொண்ட ஒரு இனத்தை தேசிய இனமாக பன்னாட்டு அரசறிவியல் விழுமியங்கள் வரையறைசெய்வதோடு, தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயித்து, இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தனியரசை நிறுவுவதற்கான தன்னாட்சியுரிமையை அவ்வாறான தேசிய இனங்களின் உரித்துடமையாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கின்றது. இந்த வகையில், தமிழ் மொழியைத் தமது பொதுவான மொழியாகவும், ஈழத்தீவின் வடக்கு – கிழக்கைப் புவியியல் மையமாகக் கொண்டுள்ள தமிழீழத்தை தமது வரலாற்றுத் தாயகமாகவும், வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கு முன்னரான தொன்மைமிக்க வரலாற்றையும், பொதுவான எதிரியையும் எதிர்கொள்ளும் தேசிய இனம் என்ற தகுதியை தமிழீழ தேசம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவே தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயித்து, இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழ தனியரசை ஈழத்தமிழினம் நிறுவுவதற்கான பன்னாட்டு அங்கீகாரம்பொருந்திய உரிமமாகத் திகழ்கின்றது.

ஈழத்தீவை விட்டு ஆங்கில ஏகாதிபத்தியம் அகன்றபின்னர் ஏறத்தாள மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட அகிம்சைவழி தழுவிய காந்தியப் போராட்டம் சிங்கள இனமேலாதிக்க அடக்குமுறையால் நசுக்கப்பட்ட நிலையில் எழுச்சிபெற்ற ஆயுதவழி தழுவிய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு சனநாயக ஆணைவழங்கிய மாபெரும் வரலாற்றுப் பிரகடனமாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் விளங்குகின்றது. இதன் மீதான சனநாயக பொதுக்கருத்து வாக்கெடுப்பை புகலிட தேசங்களில் நிகழ்த்தி, எமது அரசியல் வேணவாவை மீண்டுமொரு தடவை உலக சமூகத்திற்கு எடுத்தும், இடித்தும் உரைத்து, தமிழீழ தேசத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது எமது இன்றைய முதன்மை வரலாற்றுப் பணியாகத் திகழ்கின்றது.

இந்த வரலாற்றுக் கடப்பாட்டிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அண்மைய மாதங்களாக நிகழ்ந்தேறி வரும் மீள்வாக்கெடுப்புக்களின் தொடர்ச்சியாக, யேர்மன் தேசத்திலும் இம்மாதம் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று (24.01.2010) இவ்வாறான பொதுக்கருத்து வாக்கெடுப்பை நிகழ்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென பூர்வீக யேர்மனிய கண்காணிப்பாளர்களையும், பதிவாளர்களையும் உள்ளடக்கிய சுயாதீன தேர்தல் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதோடு, தமிழ் மக்கள் செறிந்துவாழும் நகரங்கள் தோறும் வாக்குப் பதிவுநிலையங்களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இதில் பங்கேற்று, தங்களது வாக்குகளைச் செலுத்தி, சுதந்திரமும், இறையாண்மையும் பொருந்திய தமிழீழ தனியரசை நிறுவி மாவீரர்களினதும், மானச்சாவெய்திய மக்களினதும் கனவை நனவாக்குவதற்கான ‘மக்கள் ஆணையை’ உறுதிசெய்யுமாறு அனைத்து யேர்மன்வாழ் தமிழீழ உறவுகளுக்கும் அன்புடன் அறைகூவல் விடுக்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

தேர்தல் குழு – யேர்மனி

தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 017628452181

மின்னஞ்சல்: mandate2009@gmail.com

இணைய முகவரி: www.tamilmandate.de

Blog Archive