Friday, January 14, 2011

ஈகி முத்துக்குமார் சிலை திறப்பு அழைப்பிதழ்

ஈழத்தமிழர் மீதான சிங்கள இந்திய கூட்டுப்படை நடத்திய இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்தக் கோரி தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தழல் ஈகி முத்துக்குமாருக்கு, அவர் உயிர் துறந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 29.01.2011 அன்று தஞ்சையில் மார்பளவு சிலை திறக்கப்படுகின்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

ஈகி முத்துக்குமாருக்கு முதன் முதலாக சிலை வைக்கும் பணியை, அவரது இறப்புக்குப் பின் உருவான இளந்தமிழர் இயக்கம் கடந்த 2010 ஏப்ரல் மாதத்தில் அறிவித்து அதற்காக, உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களின் பங்களிப்போடு மாவீரன் முத்துக்குமாரின் மார்பளவு சிலையை உருவாக்கியது.

அச்சிலையை, தஞ்சையில் தமிழ் உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர் அவர்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு கொடையாக அளித்த நிலத்தில் அதனைத் திறக்கவும் த.தே.பொ.க. ஏற்பாடுகளை செய்திருந்தது.

எனினும், 2011 மே 16 அன்று நடக்கவிருந்த, சிலை திறப்பு நிகழ்வில் சிலையை திறக்கக் கூடாது என தஞ்சை மாவட்டக் காவல்துறை தடை விதித்தது. தமிழ் உணர்வாளர்களுக்குக் கொந்தளிப்பை அளித்த அத்தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அப்போது அறிவித்தார்.

அவரது அறிவிப்பின்படி மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அத்தடையை நீக்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் அதிகார அத்துமீறலையும் நீதிபதி தனது தீர்ப்பில் கண்டித்தார். இத்தீர்ப்பையடுத்து தான், திட்டமிட்டபடி மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வு 29.01.2011 அன்று நடைபெறவிருக்கிறது.

சிலை திறப்பு நிகழுமிடம்

இந்நிகழ்வு தஞ்சை திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாணூரப்பட்டியில் 29.01.2011 சனியன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றது.

சுடரோட்டம்

நிகழ்வையொட்டி தழல் ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் சுடரோட்டம் பிற்பகல் 2 மணிக்கு திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தொடங்கி சாணூரப்பட்டி வரை நடக்கிறது. இச்சுடரோட்டத்தை தமிழக இளைஞர் முன்னணியின் புதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு தலைமை தாங்குகிறார். தமிழக இளைஞர் முன்னணியின் தஞ்சை நகரச் செயலாளர் தோழர் க.செந்திறல், புதலூர் ஒன்றியப் பொருளாளர் தோழர் க.தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

த.இ.மு. தஞ்சை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இரெ.சிவராசு தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி

மாலை 5 மணியளவில் சாணூரப்பட்டியில் திரு. இரா.ரெங்கராசன் அவர்களின் தஞ்சை வீரசோழக் கிராமியக் குழுவினரின் தப்பாட்டம் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குழுவின் கலைஞர்களுக்கு த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் சிறப்பு செய்கிறார்.

பாவீச்சு

கலை நிகழ்வுக்குப் பின், “எரிதழல் ஏந்தி வா!” என்ற தலைப்பில் கவிஞர்கள் பங்குபெறும் பாவீச்சு நடைபெறுகின்றது. இதில், கவிஞர்கள் கவிபாஸ்கர், கவித்துவன், ஓசூர் இரா.சு.நடவரசன் ஆகியோர் பங்குபெறுகின்றனர்.

சிலை அன்பளிப்பு

மாவீரன் முத்துக்குமாரின் மார்பளவு சிலையை நிறுவும் வகையில் த.தே.பொ.க.விடம் கையளித்த இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் க.அருணபாரதி, செயற்குழு உறுப்பினர் தோழர் ம.செந்தமிழன் ஆகியோர் சிலை அன்பளிப்புரை நிகழ்த்துகின்றனர்.

பாராட்டு

மாவீரன் முத்துக்குமார் சிலையை நிறுவ விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்த மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வென்ற, வழக்கறிஞர் தோழர் த.லஜபதிராய் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வு நடக்கிறது. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் பாராட்டுரை நிகழ்த்துகிறார்.

கலை நிகழ்ச்சி

இதன்பின், தோழர் தேவேந்திரன் குழுவினர் நடத்தும் ”மாவீரன் முத்துக்குமார் மரணவாக்குமூலம்” கலை நிகழ்ச்சி நடக்கிறது.

சிலை திறப்பு உரைவீச்சு

இந்நிகழ்வுகளுக்குப்பின் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு தலைமை தாங்குகிறார். சிலையை நிறுவ நிலம் வழங்கிய புலவர் இரத்தினவேலவன், ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு. ச.குமரேசன், த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஆ.சண்முகம், கு.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ.கருணாநிதி வரவேற்புரையாற்றுகிறார். சிலையைத் திறந்து வைத்து த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றுகிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு.த.வெள்ளையன், தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, புதலூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் திரு.இரா.நந்தகுமார், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா ஆகியோர் எழுச்சியுரையாற்றுகின்றனர். நிறைவில் த.தே.பொ.க. புதலூர் ஒன்றியச் செயலார் தோழர் கெ.செந்தில்குமார் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

சிலை திறப்பு நிகழ்வுக்கு தமிழகமெங்குமிருந்து தமிழ் உணர்வாளர்கள் ஒன்று திரள வேண்டுமென த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Blog Archive