Monday, September 21, 2009

ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பாக நாளை 'முகாம்களை திறந்து விடு' போராட்டம்

வன்னியில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்டு வரும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கக்கோரி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் முன்பாக மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

சிறிலங்கா அரசு போர்க் கைதிகளை அடைத்து வைத்திருப்பது போன்று தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை இந்தப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.



"கடந்த மே மாதத்தில் பட்டினி போட்டும் வகை தொகையற்ற தாக்குதல்கள் மூலமும் சிறிலங்காப் படையினர் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்தப் போரை 'கடற்கரையோர இரத்த ஆறு' என ஊடகங்கள் வர்ணித்துள்ளன." அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செயலவை விடுத்த அறிக்கையின் விபரம் வருமாறு:

தமிழ்ச் சமூகத்தை அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள், காணாமல் போகச் செய்யப்படுதல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களின் மூலம் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

படையினரின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும், போர்க் கைதிகளைத் தடுத்து வைக்கும் முகாம்களில் 2 லட்சத்து 82 ஆயிரம் தமிழ் மக்கள் போதிய உணவு மற்றும் தண்ணீர் இன்றியும் சுகாதார வசதிகளற்ற நிலையிலும் காலவரையறை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.



முகாம்களின் நிலை மேம்படுத்தப்படா விட்டால் பேரழிவு காத்திருக்கின்றது என மருத்துவர்கள் எச்சரித்து வரும் அதேசமயத்தில், போசாக்கு குறைபாடுகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை முகாம்களில் அதிகரித்து வருகின்றது.

அண்மையில் பெய்த மழையின்போது மக்கள் தங்கி இருக்கும் கூடாரங்கள் மற்றும் தங்கும் இடங்களுக்கு ஊடாக மனிதக் கழிவு ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி மனிதன் வாழ்வதற்கு தகுதியற்ற சுகாதார நிலையை அங்கு ஏற்படுத்தியது என்றும் மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும் மனித உரிமை பணியாளர்கள் அண்மையில் விமர்சனம் செய்திருந்தார்கள்.

உலகிலேயே மிகப் பெரியதான மெனிக் பாம் முகாமில் நாளொன்றுக்கு 1,400 பேர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த வருடம் முழுவதும் கொங்கோவிலும் டாபரிலும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் வன்னியில் ஒரு நாளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கின்றது.

போர்க் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கோரி வருகின்றபோதும், சுயாதீனமான எந்த விசாரணை நடத்தப்படுவதையும் ஊடகவியலாளர்கள் போர் நடந்த பகுதிகளுக்குச் செல்வதையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து தடுத்து வருகின்றது.

பேசுவதற்குத் துணிந்த தொண்டர் நிறுவனப் பணியாளர்களை சிறிலங்கா அரசு நாட்டை விட்டுத் தொடர்ந்தும் வெளியேற்றி வருகின்றது. தனது சொந்த பணியாளர்களையே முகாம்களில் இருந்து விடுவிக்க முடியாத நிலையில் ஐ.நா. திணறுகின்றது.

கடந்த மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அந்த முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், "நான் பார்த்தவைகள் குறித்து கவலையும் பரிதாபமும் அடைந்தேன். உலகம் முழுவதும் உள்ள இதுபோன்ற இடங்களுக்கு நான் பயணித்துள்ளேன். ஆனால், இங்கு நான் பார்த்தவைகள் மிகவும் பரிதாபத்திற்குரிய காட்சிகள்" எனக் கூறியிருந்தார்.

அப்படி இருப்பினும், முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கும் சிறிலங்கா அரசு மீது போர்க் குற்றங்களைச் சுமத்துவதற்கும் பான் கீ மூனின் கீழ் இயங்கும் ஐ.நா. ஒப்பீட்டளவில் சிறிதளவு நடவடிக்கைகளையே இதுவரை எடுத்துள்ளது.

நிலைமைகள் இப்போது இன்னும் பரிதாபத்திற்குரியதாக மாறியிருக்கின்றன. எனினும் ஐ.நா. நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாத்து அவர்களை தாயகப் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஐ.நா. உடனடியாகத் தலையிட்டு தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blog Archive