இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராகப் பட்டினிப்போர் தொடுத்து ஈகைச்சாவை அணைத்துக் கொண்ட ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்திரண்டாம் ஆண்டு நினைவெழுச்சி நாட்கள் இன்று (15.09.2009) ஆரம்பமாகியுள்ளன.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ரஜீவ் காந்தியின் தலைமையிலான பாரதப் பேரரசு நிறைவேற்றத் தவறிய நிலையில், ஐந்தம்சக் கோரிக்கைகளுடன் கடந்த 1987ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ஆம் நாளன்று யாழ் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் பட்டினிப்போர் தொடுத்த ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள், பன்னிரண்டு நாட்கள் நீராகாரமின்றி உண்ணாநோன்பிருந்து, இந்தியப் பேரரசால் வஞ்சிக்கப்பட்டுக் கோரிக்கைகள் எவையும் நிறைவேறாத நிலையில், 26ஆம் நாளன்று ஈகைச்சாவைத் தழுவிக் கொண்டார்.
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் பட்டினிப்போர் தொடுத்ததன் இருபத்திரண்டாவது ஆண்டு நினைவெழுச்சி நாட்கள் இன்று தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழ் வன்னிப் பெருநிலப்பரப்பு இருந்த பொழுது, இதே நாளில் தமிழீழ தாயக நேரம் காலை 9:55 மணிக்கு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்கள் தோறும் பொதுச்சுடரேற்றப்பட்டு, தமிழீழ தேசியக் கொடியேற்றப்பட்டு, ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படங்களுக்கு ஈகைச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டி, மலர்தூவி, அகவணக்கம் செலுத்தி நினைவு வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் தூய்மைப்படுத்தல் (சிரமதானம்) பணிகளும், இலவச மருத்துவப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டதோடு, நினைவெழுச்சி நாட்களின் இறுதி மூன்று நாட்களாகிய 24ஆம், 25ஆம், 26ஆம் நாட்களில் ஆலயங்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட பந்தல்கள் போன்றவற்றில் காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை அடையாள உண்ணாநோன்புகள் நிகழ்த்தப்பட்டன.
இறுதி நினைவெழுச்சி நாளாகிய 26ஆம் நாளன்று, ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் ஈகைச்சாவைத் தழுவிய நேரமாகிய காலை 10:48 மணிக்கு ஆலயங்கள், தேவாலயங்கள் தோறும் மணியொலி எழுப்பி மக்கள் வீரவணக்கம் செலுத்தினர். இதன் பின்னர் மாலை 4:30 மணி வரை கோட்ட – பிரதேச வாரியாக பொதுக்கூட்டங்களும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இதே பன்னிரண்டு நாட்களில் புலம்பெயர்வாழ் தேசங்களிலும் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாக பல்வேறு எழுச்சி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதோடு, தமிழீழ தாயகத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், சிறைகளிலும், தலைமறைவாகவும், தமது அகங்களில் சுடரேற்றியும் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களை ஈழத்தமிழர்கள் நினைவுகூர்ந்தனர்.
தமிழீழ தாயகம் முழுவதும் தற்பொழுது சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு முட்கம்பி வேலி வதைமுகாம்களில் மூன்று இலட்சம் வன்னி மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி” என்ற கனவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் பொறுப்பு புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களில் தோள்களில் தற்பொழுது முழுமையாக சுமத்தப்பட்டுள்ளது.