ஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருந்த போதிலும், போர்க் குற்றம் புரிந்தவர்களை அல்லது போர்க்குற்ற சந்தேக நபர்களை பிரித்தானியாவின் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என எழுந்த அச்சம் காரணமாக அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்தது.
எப்படியாயினும், சட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து அதில் தங்கியிருக்கவோ அல்லது திருப்தியடையவோ முடியாது. அதனால் பிரித்தானிய தமிழர்களும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவர்களும் ராஜபக்சவின் வருகை மற்றும் ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்ற அனுமதித்ததற்கு எதிராக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச கடந்த 2008ஆம் ஆண்டும் இதே பல்கலைக்கழக சங்கத்தினர் மத்தியில் உரையாற்றியிருந்ததுடன், தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு திரட்டும் தளமாகவும், படை நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையிலும் அந்த மேடையைப் பாவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு தோற்றுப் போக நேர்ந்தால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகின் தோல்வியாக முடியும் எனவும், சனநாயகம் தோற்றுப்போகும் எனவும் தனதுரையில் கூறிய மகிந்த, தாம் முன்னெடுத்த போருக்கு ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் சபை சிறீலங்கா அரசைக் கண்டித்த பின்னர்கூட, தாம் ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு உட்பட பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும், பன்னாட்டு சட்டத்தை மதித்து நடப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறான பின்புலத்தில் மனித உரிமைகளை மதிக்காது நடந்து வருவது மட்டுமன்றி, தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது.
போரினால் தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடிமறைத்து, மனித உரிமைகளை மதிக்காது தொடர்ந்தும் செயற்பட்டு வருவதுடன், கருத்து வெளிபாட்டு சுதந்திரத்தை மறுதலித்துவரும் ராஜபக்சவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
நீங்கள் என்ன செய்யலாம்?
- ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவ சமூகத்தினர் ஆகியோரை அணுகி, உயர்ந்த கல்விச் சமூகத்தின் முன்னிலையில் ஒரு போர்க் குற்றவாளி உரையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.
- ஒஸ்போர்ட் பிரதேசத்தில் உங்களுக்கு தொடர்புகள் இருந்தால் அவர்கள் மூலம் சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலத்திற்குக் கொண்டு வாருங்கள்.
- எதிர்வரும் 2ஆம் நாள் மகிந்த ராஜபக்சவிற்கு ஒஸ்போர்டில் எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவையினால் எடுக்கப்படும் நடவடிக்கையில் உங்களையும் தவறாது இணைத்துக் கொள்ளுங்கள். (இது பற்றிய விபரங்கள் பின்னர் பகிரப்படும்)
- உங்களின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தி, போர்க் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தச் செய்யவும்.