எமது பதிப்புக்கள்
Tuesday, July 20, 2010
ஐ.நாவை நோக்கி பிரித்தானியாவில் இருந்து நடை பயணம்
at
9:03 AM
Posted by
எல்லாளன்
போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
கறுப்பு ஜூலையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து இவரது நடை பயணம் ஆரம்பமாகவுள்ளது.
மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், ஏ-3 நெடுஞ்சாலையூடாக நடந்து போட்ஸ்மவுத் கடற்கரையைச் சென்றடைந்து, அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.
இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் மனுக் கையளிக்கப்பட இருக்கின்றது.
சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன.
அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன. அத்துடன், சிவந்தன் மேற்கொள்ளும் இந்த நடை பயணத்தில் தத்தமது பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து நடக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
மாற்றுமொழி ஊடகங்களுக்கும் இது பற்றி அறிவிப்பதுடன், தமிழ் ஊடகங்களும் இந்த நடை பயணத்திற்கும், ஆங்காங்கே தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் தமிழ் இளையோம் அமைப்பு போன்றன கேட்டுள்ளன.
இதேபோன்று பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களும் இந்த நடை பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், சிவந்தனுடன் இணைந்து நடப்பதன் ஊடாக தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐரோப்பிய மக்கள் முன்னலையில் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் இந்த நடை பயணத்தை ஏனைய நாடுகளில் ஒழுங்கு செய்துள்ள ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கறுப்பு ஜூலை - "நியாயத்துக்காக நடைபயணம்" நடுநிசி விழிப்புநிலைப் போராட்டம்
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடந்த கலவரத்தில் தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நாளான கறுப்பு ஜூலையின் 27 ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு லண்டனில் நடைபெறவுள்ளது.
இந்த கறுப்பு ஜூலை ஊர்வலமானது 2010 ஜூலை 23ம் திகதி, வெள்ளிக்கிழமை வெஸ்மினிஸ்டர் மெதடிஸ்ட் தேவாலயத்தின் பின்புறமாக உள்ள டோதில் வீதியில் (Tothill Street) இரவு 9 மணிக்கு ஆரம்பமாகி டவுனிங் வீதியில் (Downing Street) 11.30 மணிக்கு நிறைவடையவுள்ளது.
இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு லண்டன் வாழ் தமிழர்கள் அனைவரும் வேண்டப்படுகிறார்கள். பேரணி நடக்கவுள்ள இடத்துக்கு அண்மையாக செண்ட் ஜேம்ஸ் பார்க் அல்லது வெஸ்மினிஸ்டர், தொடரூந்து நிலையங்கள்(Under Ground) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பேரணியானது, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை ஆரம்பிக்க வேண்டும், போர்க் கைதிகளைச் சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும், மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக இலங்கையைப் பகிஸ்கரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளைச் சர்வதேசத்திடம் விடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும். தேவைப்படுவோர் பிரித்தானிய தமிழர் பேரவையை +44(0)20 8808 0465 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.
கறுப்பு ஜூலை நடைபெற்று 27 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கடந்த காலத்தில் தமிழர்கள் மீது சிங்கள அரசு கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளை உணர்ந்து கொள்வதும் இங்கு அவசியமாகும்.
1948 இல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்து சில மாதங்களின் பின்னர், இலங்கை அரசாங்கமானது 33% வீதமான தமிழர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்தது. தற்போது 62 ஆண்டு காலமாகியும் இந்த பாகுபாடு தொடர்கிறது.
1958 ஆம் ஆண்டில் இனப்படுகொலையின் முதலாவது கட்டமாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தற்போது 52 ஆண்டுகள் ஆகியும் இந்த வன்முறை தொடர்ந்த வண்ணம் உள்ளது. 1983 ஆம் ஆண்டில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். 150,000 தமிழர்கள் தமது வீடு, வாசல்களை இழந்தனர்.
தற்போது 27 ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் தமிழ் இன அழிப்பு நடந்து கொண்டே உள்ளது. 2009 ஆம் ஆண்டில் 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு, 3 லட்சம் தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் உலகம் கவனித்துக்கொண்டு இருக்கும் நிலையிலும், தமிழர் அழிப்புத் தொடர்கிறது...
இன்று, இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான தேவைகளை ஏற்பாடு செய்யும்படி கைவிடப்பட்டுள்ளனர், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் தலைவிரித்தாடுகின்றன, தமிழ் பகுதிகளை அரசு சிங்களக் குடியேற்றமாக்குகிறது, ஊடகத் தடை விதிக்கப்பட்டுள்ளது, சர்வதேச கண்காணிபாளர்கள் அப்பகுதிகளை அணுக முடியாதுள்ளது, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை, உயிருடன் வாழ்ந்துள்ளவர்களுக்காகவும் ஆதரவுக் குரல் எதுவும் இல்லை...
அநியாயம் தொடர்கிறது...
ஒரு புறம் இன அழிப்பு, மறுபுறம் திட்டமிட்ட கலாச்சார சீரழிவு என இலங்கை அரசு எம் இனத்தை அழித்து வேரோடு சாய்க்க நினைக்கிறது. பிரித்தானியாவில் இரவு 9.00 மணிக்கு இந்த விழிப்புணர்வுப் போராட்டம் நடைபெறவுள்ளது. அனைத்துத் தமிழ் மக்களும் இதில் கலந்துகொண்டு எமது ஒற்றுமையை வெளிப்படுத்தி இலங்கை அரசின் இன அழிப்பை உலகிற்கு பறைசாற்றவேண்டும் !
Labels
அமெரிக்கா
அயர்லாந்து
அவுஸ்திரேலியா
அறிவித்தல்
இத்தாலி
இளைஞர்களின் குரல்கள்
ஈழம்
ஒஸ்ரியா
கனடா
கியுபெக்
சுவிஸ்
சுவீடன்
சென்னை
டென்மார்க்
டோகா
தமிழகம்
திரைப்படம்
தேர்தல்
நாடு கடந்த அரசு
நியூஸ்லாந்து
நெதர்லாந்
நெதர்லாந்து
நோர்வே
பிரான்சு
பிரித்தானியா
புலம்
பெல்ஜியம்
மக்களவை தேர்தல்
மாவீரர் நாள் 2009
மாவீரர் நாள் 2010
யேர்மனி
ரொரன்றோ
வட்டுக்கோட்டை தீர்மானம்
வரும் நிகழ்வுகள்
வாக்கெடுப்பு
வெளியீடுகள்