Friday, July 23, 2010

கனடா, ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் ஜீலை 25, கறுப்பு யூலை ஒன்றுகூடல்


உலகலாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்வுகளின் வரிசையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் Queen's Park முன்றலில் பாரிய ஒன்றுகூடல் ஒன்றிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - கனடா பிரதிநிதிகள், கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியன அழைப்புவிடுத்துள்ளன.

27 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்றும் 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது.

தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேய கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

எம் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இனப்படுகொலை செய்துவரும் சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது உயிரைக் காக்க தப்பிவரும் தமிழர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி சர்வதேச ரீதியாக தமிழர்களை தனிமைப்படுத்த முயன்று நிற்கின்றது.

இந்நிலையில் எமது ஒன்றுபட்ட எழுச்சியும், காலத்தின் தேவைகருதிய விரைந்த செயற்பாடுகளும் எம் மக்களின் நிலையை வெளிகொணருவதும் அவசியம் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வகையில் போர்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும்.

போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, ராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஓன்றுகூடலின் முக்கிய கருப்பொருள்களாக முன்வைக்கப்பட்டுள்ன.

இலட்சியத்தில் ஓர்மம் கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களே வரலாறு படைப்பார்கள். வாருங்கள், வரலாறாக வாருங்கள், எங்களுக்காக, எங்கள் சொந்தங்களுக்காக வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Blog Archive