Friday, March 06, 2009

அவுஸ்திரேலிய தமிழர்களின் 'சுதந்திரத்துக்கான மாபெரும் அணிவகுப்பு'

ஐக்கிய நாடுகள் சபையிடமும் அனைத்துலக சமூகத்திடமும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பதற்காக அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் 'சுதந்திரத்துக்கான மாபெரும் அணிவகுப்பு' எனும் கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.

இப்பேரணியை அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பினர், மெல்பேர்ணில் இயங்கும் தமிழ் அமைப்புக்களின் அனுசரணையோடு நாளை சனிக்கிழமை ஒழுங்கு செய்துள்ளனர்.

பேரணி காலை 10:00 மணிக்கு நகர மையப் பகுதில் உள்ள பெடரேசன் சதுக்கத்தில் (FEDERATION SQUARE ) தொடங்கி நகரின் முக்கிய பகுதிகளை கடந்து நாடாளுமன்ற முன்றலை கடந்து, மீண்டும் பெடரேசன் சதுக்கத்தை வந்தடையும்.

இந்த நிகழ்வின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையிடமும் (United Nations), அனைத்துலக சமூகத்திடமும் (IC) விடுக்கப்படவுள்ள மூன்று முக்கிய கோரிக்கைகளாவன:

1) பாதுகாப்பு வலயம் என்ற பகுதிக்குள்ளும் இடம்பெயர்ந்து செறிவாக அப்பாவி பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீதும் கண்மூடித்தனமான தொடர் எறிகணைத் தாக்குதல்களையும், வான் தாக்குதல்களையும் சிறிலங்கா அரசாங்கப் படைகள் மேற்கொள்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிருக்கான பாதுகாப்பு உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

2) சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வர விரும்பாமல், தங்கள் சொந்த மண்ணில் வாழ ஆசைப்படுகின்ற மக்களை, அவர்களின் விருப்பப்படியே உயிர்ப் பாதுகாப்போடு சுதந்திரமாக நிம்மதியாக வாழ வழி செய்யப்படவேண்டும். அவர்களுக்கான உணவுப்பொருட்களும், மருந்துப் பொருட்களும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடைமுறைப்படுத்த விரைந்து செயற்பட வேண்டும்.

3) சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் அகப்பட்டு, வதை முகாம்களுக்குள் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் சித்திரவதைக்கும், பாலியல் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். அப்பாவித் தமிழ்ப்பெண்கள் பலர் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறார்கள். தமிழ் இளையோர் பலர் சுட்டுக்கொல்லப்பட்டு புதைக்கப்படுகிரார்கள். இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு வதை முகாம்களுக்குள் வாழும் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் நிம்மதியாக வாழவும் வழி செய்யப்பட வேண்டும். இதனை உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதந்திரத்துக்கான மாபெரும் அணிவகுப்பு

AUSTRALIAN TAMILS MARCH FOR FREEDOM

இடம்: FEDERATION SQUARE (next to Flinders Street station)
காலம்: SATURDAY 7TH MARCH 10:00AM - 1:00PM

இதேவேளை, 'அனைத்துலக மகளிர் நாளினை' முன்னிட்டு அவுஸ்திரேலியா மகளிர் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஆதரவோடு நாளை மறுநாள் சோசலிச முன்னணி நெறிப்படுத்தும் மாபெரும் கவனயீர்ப்பு அணிவகுப்பு 'போருக்கு எதிரான பெண்கள்' என்ற தலைப்பில் நடைபெற இருக்கின்றது.

இந்நிகழ்வில் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய சிறுபான்மை இன மக்களின் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுடன், ஈழத் தமிழ் பெண்கள் போரினால் அடையும் இன்னல்களையும் கருத்தில் கொண்டு, மெல்பேர்ண் வாழ் தமிழ்ப் பெண்மணிகளையும், குடும்பத்தவர்களையும் மற்றும் பெண் உரிமைவாதிகளையும் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மகளிர் அமைப்பின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 1:00 மணியில் இருந்து பிற்பகல் 3:00 மணி வரை நகர மையப் பகுதில் உள்ள விக்ரோரியா மாநில பொது நூலக முன்றலில் அணிவகுப்பு தொடங்கி நகரின் முக்கிய பகுதிகளை கடந்து விக்ரோரியா நாடாளுமன்ற முன்றலை சென்றடைய இருக்கின்றது.

எனவே, இந்த நிகழ்வின் ஊடாக முக்கியமாக தமிழின பெண்கள் போரினால் சந்திக்கும், அவலங்களையும் அவர்களின் அபிலாசைகளையும் இந்த அவுஸ்திரேலியா மண்ணில் வாழும் அவுஸ்திரேலிய மக்களுக்கும், அனைத்துலக அமைப்புக்களுக்கும், பொது ஊடகங்களுக்கும் எடுத்துக்காட்ட சகல தமிழ்ப் பெண்மணிகளையும், குடும்பத்தவர்களையும் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Blog Archive